×

டெல்லியில் திடீர் முகாம் பா.ஜவுக்கு தாவுகிறாரா கமல்நாத்?

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் பாஜவில் இணையவுள்ளதாக செய்திகள் பரவிவந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதனால் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கமல்நாத் மீது ராகுல்காந்தி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகின்றது. அதை தொடர்ந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு கமல்நாத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே கமல்நாத்தும் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கமல்நாத் கடந்த சில நாட்களாக தான் 9 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டசிந்த்வாரா தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் இந்த பகுதியில் உள்ள 28 தொகுதிகளை பாஜ கைப்பற்றிய போதிலும், மக்களவை தேர்தலில் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் சிந்த்வாராவில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மூத்த தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்து வருகின்றனர். கமல்நாத்தும் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணையவுள்ளதாக செய்தி பரவியது. இந்நிலையில் கமல்நாத் நேற்று பிற்பகல் டெல்லி சென்றடைந்தார். பாஜ தலைவர்களை சந்திப்பதற்காக அவர் டெல்லி வந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து செய்தியாளர்கள் கமல்நாத்திடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பேசிய கமல்நாத்,’ எதையும் மறுப்பதற்காக அல்ல. நீங்கள் இதனை கூறுகிறீர்கள். உங்களது நபர்கள்(செய்தியாளர்கள்)உற்சாகமாக இருக்கிறார்கள். ஆனால் நான் உற்சாகமாக இல்லை. இந்த பக்கமோ அல்லது அந்த பக்கமோ எதுவாக இருந்தாலும் முதலில் உங்களுக்கு தெரியப்படுத்துவேன்’ என்றார்.

* காங்கிரஸ் பயோவை நீக்கினார் மகன்

சிந்த்வாரா எம்பி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கமல்நாத் மகன் நகுல்நாத் நேற்று திடீரென தனது சமூக வலைதளங்களில் தனது பயோவில் இருந்து காங்கிரசை நீக்கிவிட்டார். இதனால் நகுல்நாத், கமல்நாத் இருவரும் பா.ஜவில் இணையப்போவதாக மபியில் பரபரப்பு எழுந்துள்ளது. சிந்த்வாரா தொகுதியை மகனுக்கு ஒதுக்க கேட்டு, பா.ஜவிடம் கமல்நாத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்றும், அது முடிவுக்கு வந்த பிறகு இருவரும் பா.ஜவில் இணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

The post டெல்லியில் திடீர் முகாம் பா.ஜவுக்கு தாவுகிறாரா கமல்நாத்? appeared first on Dinakaran.

Tags : Kamal Nath ,BJP ,Delhi ,New Delhi ,Congress ,Congress party ,Madhya Pradesh ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...